திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுஜித் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “திருச்சி துறையூர் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் முத்து செல்வம். இவரது மனைவி ஹேமலதா உப்பிலியபுரம் ஒன்றிய சேர்மனாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பழைய டாட்டா சுமோ வாகனம் ஏலம் எடுப்பதற்காக நான் உள்பட சிலர் ரூபாய் 10 ஆயிரம் முன்பணம் கட்டி இருந்தோம். இந்நிலையில் ஏலம் எடுக்க நான் உப்பிலியபுரம் அலுவலகம் சென்றபோது அங்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் முத்து செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னிடம், ‘என்னை மீறி யாரும் ஏலம் எடுக்கக் கூடாது. அப்படி ஏலம் எடுப்பவர்களை கொலை செய்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மேலும் இது சம்பந்தமாக உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவலர்களுடன் பார்வையிடச் சென்றபோது சிசிடிவி காட்சிகளை முறைகேடாக அழித்துவிட்டனர். மேலும், கடந்த 17 ஆம் தேதி உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் முத்து செல்வம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்” என்று கூறி தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.