தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை இலக்கியத் திருவிழா - 2023 நடைபெற்றது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இவ்விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். கடந்த ஜனவரி 6 ஆம் தேதி துவங்கப்பட்ட இவ்விழா மூன்று நாட்கள் நடந்து இன்றுடன் நிறைவடைந்தது. இவ்விழாவில் பங்கேற்று திமுக எம்.பி கனிமொழி உரையாற்றினார்.
தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம் எனும் தலைப்பில் உரையாற்றிய அவர், “ஆண்டாள் எழுதிய அதே விஷயங்களை சமகாலத்தில் உள்ள பெண் கவிஞர்கள் எழுதும் போது அது எந்த அளவிற்கு சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்தச் சமூகம் ஒரு காலத்தில் வரையறைகளாக வைத்திருந்த விஷயங்கள் இப்பொழுது எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் நாம் காண முடியும். பெண்கள் தன் உடலைப் பற்றிய விஷயங்களை; தன் உடலை தான் எப்படி பார்க்கிறேன் என்பதைப் பற்றி வெளிப்படையாக எழுதும்போது இச்சமூகத்தை அது மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
ஆனால், அப்பெண்களை விமர்சனம் செய்த கவிஞர்கள் இதை விட மோசமாக திரைப்பாடல்கள், கவிதைகள் போன்றவற்றின் மூலம் மிகக் கேவலமாக எழுதியுள்ளார்கள். அதையே பெண் எழுதும்போது அப்பெண் மீது எந்த அளவிற்கு தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்பட்டது என்பதையும் நாம் பார்த்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக அமில வீச்சு அதிகமாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ரெமோ என்ற திரைப்படம் ஒன்று வந்தது. அப்படத்தில் கூட அமில வீச்சினை அன்பால் செய்த ஒன்று என்று நியாயப்படுத்தி இருப்பார்கள். அதை நியாயப்படுத்தும் சூழலை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்” எனப் பேசினார்.