பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனது தொடர்பான சம்பவத்தில் போலீசார் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வசித்து வரும் சென்னை அபிராமபுரம் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் மார்ச் 30 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த வடநாடு மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் சென்னை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக 11 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாருமே நகைகளைத் திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் ரகசிய பதிவெண் கொண்ட லாக்கர். எனவே குடும்ப உறுப்பினர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.