
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார். இதில் திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக கூட்டணி எம்எல்ஏவான கருணாஸ் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் திமுக மாதிரி சட்டசபை கூட்டம் நடத்துகிறதே என்ற கேள்விக்கு,
சட்டசபையில் நேற்று பங்கேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஸ்டெர்லைட் பிரச்சனையை காரணம் காட்டி தொடரை முழுவதும் புறக்கணிப்பதாக கூறியிருப்பது நல்ல விஷயமாக தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை மட்டும் பிறப்பித்தால் போதாது. அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காரணம் கூறி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் தாமிர ஆலை தேவையில்லை என்று அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி சட்டம் கொண்டு வந்தால் தான் நிரந்தரமாக காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க முடியாமல் போகும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டில் தொழிற்சாலையினர் அப்பீல் செய்து ஆலையை இயங்க அனுமதி பெற வாய்ப்பு உள்ளது.
எனவே தாமிர ஆலையே தேவையில்லை என்று சொன்னால் தான் இதில் சரியாக இருக்கும். எனவே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்து வாதாட வேண்டும். மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டசபைக்குள் வந்து பேசுவதற்கு தான் போட்டி கூட்டத்தில் பேசுவதற்கு அல்ல. நாளையே சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.