வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜீலை 27ந்தேதி மாலை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார். மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை முடிக்கிறார்.
ஜீலை 27ந் தேதியை தொடர்ந்து 28 மற்றும் 29ந் தேதி என மூன்று நாள் பிரச்சாரம் செய்கிறார். வேலூரில் தங்கியுள்ள முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமியை சந்தித்து மாற்று கட்சியை குறிப்பாக அமமுகவை சேர்ந்தவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.
அந்த வகையில் ஜீலை 28ந் தேதி 400 பேர் அதிமுகவில் இணைந்ததாக அதிமுக தரப்பில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளனர். இதில் வேலூர் தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மாநகர செயலாளருமான கார்த்திகேயனின் சகோதரர் பெருமாள் என்பவரும் அதிமுகவில் இணைந்துள்ளார் எனக்கூறப்படுகிறது. அவரது உறவினர் ராஜா என்பவரும் அதிமுகவில் இணைந்துள்ளார் எனக்கூறப்படுகிறது. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் மா.செவாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்து பின்னர் அமமுகவுக்கு சென்ற நீலகண்டன் என்பவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இவர் இதே கார்த்திகேயனின் மற்றொரு சகோதரர் என்பது குறிப்பிடதக்கது.