கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த இளம்பெண்ணை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி ஆண்டோ மெர்லின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இளம்பெண்ணின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணிற்கு மிரட்டல் விட்டதோடு அவருக்கு பல்வேறு வகைகளில் காயங்களையும் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் ஏதுமில்லை எனப் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்து இருந்தார்.
மேலும் இளம்பெண்ணின் பேட்டிகள் மற்றும் ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இளம்பெண்ணைத் துன்புறுத்திய புகாரில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
அதேசமயம் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் தேதி ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் ஆண்டோ மெர்லின் ஆகிய இருவருக்கும் மார்ச் 7 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.