தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் டி.அணைக்கரைபட்டியில் நேற்று வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, ஆண்டிபட்டி மற்றும் கடமலை - மயிலை ஒன்றிய பகுதி வறட்சி நிறைந்து காணப்படுகிறது. வைகை அணையில் இருந்து சேடபட்டிக்கு பில்டர் தண்ணீர் செல்கிறது. ஆனால் இங்குள்ள தனது தொகுதி மக்கள் சாக்கடை தண்ணீரைக் குடித்து வருகின்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விவசாய அலுவலர்கள் யாரும் விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்திப்பது இல்லை. அரசு வழங்கும் தொகைகள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. முதியோர் உதவித் தொகை சரியாக வருவது இல்லை. கால்நடை மருந்தகத்தில் போதிய வசதி இல்லை என்று மாநில அரசை குற்றம்சாட்டினார்.
பின்னர் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வைகை அணை நீர் நிரந்தரமாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார். ஆனால் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இப்பகுதியை கண்டு கொள்வது இல்லை என்று சாடினார்.
இந்நிகழ்சியில் ஆண்டிபட்டி வட்டாட்சியர், வட்டாரா வளர்ச்சி அலுவலர், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறையினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.