கன்னியாகுமாி முதல் களியக்காவிளை வரையிலான 58 கிமீ தூரத்திலான தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த பாஜக ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது இந்த சாலை சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு நான்கு வழிச்சாலைக்காக கனிம வளங்களை ஏற்றி கனரக வாகனங்கள் அங்குமிங்கும் சென்றதாலும் மேலும் இங்கிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கனரக வாகனங்களில் செல்வதாலும் மூன்று ஆண்டுகளில் சாலை மீண்டும் குண்டும் குழியுமானது.
அதன்பிறகு பாராளுமன்ற தோ்தல் வந்ததோடு பொன் ராதகிருஷ்ணனும் தோல்வியடைந்து காங்கிரஸ் வசந்தகுமாா் வெற்றி பெற்றாா். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை எந்த பராமாிப்பும் இல்லாமல் குண்டும் குழியுமாக அப்படியே கிடக்கிறது. இந்த சாலை வழியாக தான் கன்னியாகுமாியில் இருந்து கேரளாவுக்கும் செல்ல வேண்டும். இதனால் தினமும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குண்டும் குழியில் இறங்கி தான் செல்ல வேண்டியுள்ளது.
10 பேராவது நிலை தடுமாறி சாலைகளில் விழுந்து கை கால்களை முறித்து காயமடைகிறாா்கள். அதேபோல் விபத்துகளும் தொடா்ந்து அதிகம் நடக்கிறது. இந்த சாலையால் பள்ளி கல்லூாி செல்லும் மாணவா்கள் அலுவலகங்களுக்கு செல்பவா்கள் சாியான நேரத்தில் செல்லமுடியாமல் அவதிபடுகிறாா்கள்.
இந்த சாலை வழியாக தான் கலெக்டரும் சம்மந்தபட்ட அதிகாாிகளும் தினமும் செல்கிறாா்கள். சாலையை சீரமைக்க 6 எம்எல்ஏ க்களும் அதிகாாிகளுடன் பல முறை பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காததை கண்டித்து பாரளுமன்றம் முன் போராட்டம் நடத்துவேன் என்று வசந்தகுமாா் எம்பியும் எச்சாித்தாா் அதற்கும் அதிகாாிகள் அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று பத்மனாபபுரம் திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமையில் திமுகவினா் தக்கலையில் இருந்து 15 கிமீ தொலைவில் நாகா்கோவிலில் இருக்கும் கலெக்டா் அலுவலகத்துக்கு நடந்து சென்று தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கலெக்டா் பிரசாந்த வடநேராவிடம் மனு கொடுத்தாா். எம்எல்ஏ இவ்வளவு தூரம் நடந்து சென்று மனு கொடுத்தது குமாி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.