உலகம் முழுவதும் கரோனோ வைரஸ் அச்சுறுத்தலில் மரண பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முழுமூச்சாக செய்துவருகிறது என்று ஆளும் கட்சியின் சார்பில் பத்திரிகைகளுக்கு பேட்டிக்கொடுப்பது மற்றும் நிவாரண உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் திமுக எம்.எல்.ஏவும் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தன்னுடைய நிதியில் இருந்து ஒருகோடி ரூபாய் கொடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தீடீர் என கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கரூர் எம்.பி., ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நோயாளிகள், துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கினார். தொடர்ந்து, மருத்துவமனை டீன் ரோஸி வெண்ணிலாவிடம் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், எம்.பி., ஜோதிமணி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 500 படுக்கைகள் கொண்ட தனிமைப் படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வார்டை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிக்க தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு, எம்.பி, நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்றார்.
எம்.எல்.ஏ.,செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜர் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு பதிலாக தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், காய்கறி விற்பனையாளர்களிடமிருந்து, 400 முதல், 500 ரூபாய் வரை ஏலதாரர் சுங்கம் வசூலிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த ஏலதாரர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், முதியோர், தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் உணவு வேண்டும் என்றால், 94422 53345, 94422 39911 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆளும் கட்சியனரே மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்துவருவது போன்று உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் எம்.பியும் சேர்ந்து அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து தேவையான பொருட்களின் பட்டியலை கேட்டு பெற்றது மக்களின் சோதனை காலங்களில் கட்சி பேதம் இன்றி அனைத்து கட்சியினரும் களத்தில் இறங்கியிருப்பது ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கிறது என்கிறார்கள் கரூர் கட்சியினர்.