Skip to main content

"அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு பதற்றத்தை உருவாக்கும்" -பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

DMK - MKStalin statement about 10th Public exams issue

 

கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் .


தற்போது ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். மார்ச் 24-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும். 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 இல் தொடங்கும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்றினால் பீதியும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவ - மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கவே செய்யும்.

மக்களின் மனநிலையை பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதல்வர்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வுத் தேதிகளை யாரை கேட்டு தமிழக அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர் - பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?

 


மே17-ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பதை அரசு இன்னமும் இறுதி முடிவு செய்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேர்வு தேதியை அறிவிக்க என்ன அவசரம், என்ன அவசியம்?

கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது, முறையானது. தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மனரீதியாக தயார் செய்த பிறகு, தேர்வு தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும். நெருக்கடி மிகுந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் தன் பங்குக்குக் குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமல்ல" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்