Skip to main content

திமுகவிலேயே இரண்டு வேட்பு மனு! உட்கட்சி பூசலை வென்றது யார்?

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

DMK member who contested against DMK candidate! Who won?

 

நகராட்சியாக இருந்த கடலூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பெருமான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இன்று (4ஆம் தேதி) மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பாளர்களை கட்சி தலைமைகள் நேற்று அறிவித்தன. 

 

அதன்படி கடலூர் மாநகராட்சிக்கான மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி, மாவட்ட பொருளாளர் வி.எல்.எஸ். குணசேகரனின் மனைவி கீதா ஆகிய இருவரும் தலைமையிடம் பேசிவந்தனர். இந்நிலையில், கட்சித் தலைமை சுந்தரியை மேயர் வேட்பாளராக அறிவித்தது. 

 

அதனைத் தொடர்ந்து இன்று பதவியேற்றுக் கொள்ள மாநகராட்சிக்கு சுந்தரி அவரது கணவர் ராஜா உட்பட கட்சியினருடன் சென்றார். 45 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில் சுந்தரியுடன் 12 பேர் மட்டுமே வருகை தந்தனர். இதன் காரணமாக தேர்தல் அதிகாரி சுந்தரியின் வேட்புமனுவை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தார்.

 

அதேசமயம், சுந்தரிக்கு எதிராக கீதா வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக கீதா தரப்பு 20க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்களை தங்களுடன் புதுச்சேரிக்கு அழைத்து சென்றுவிட்டதாகவும் செய்திகள் பரவின. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. 

 

ஆனால், சற்று நேரத்தில் கீதா உட்பட 32 உறுப்பினர்கள் வந்தனர். அதனைத் தொடர்ந்து சுந்தரி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதேபோல், கீதாவும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 45 வார்டு உறுப்பினர்களில் 32 பேர் பங்கேற்றனர். அதில், திமுக அறிவித்த சுந்தரிக்கு 19 ஆதரவு தெரிவித்திருந்தனர். அவருக்கு போட்டியாக நின்ற கீதாவுக்கு 12 ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒரு வாக்கு செல்லாமல் போனது. 

 

அதன்படி மறைமுக தேர்தலில் 19 வாக்குகள் பெற்று திமுக அறிவித்த சுந்தரி கடலூர் மேயராக பதவியேற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்