Skip to main content

அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும்...தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் சொன்ன திமுக முன்னாள் அமைச்சர்...!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27ந்தேதி மற்றும் 30ந்தேதி என நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சி பஞ்சாயத்துக்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியங்கள் உள்ளன. மொத்த ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் எண்ணிக்கை 341 இடங்களாகும். இதில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மீதியுள்ள 338 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 

 

DMK-Local body election- Election Commissioner

 

 

அதேபோல் 34 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு 151 பேர் போட்டியிடுகின்றனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை 6207. இதில் 1544 இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மீதியுள்ள இடங்களுக்கே தேர்தல் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஒன்றியங்களுக்கு முதல் கட்டத்திலும், மீதியுள்ள 9 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில் டிசம்பர் 24ந்தேதி திடீரென திமுக மா.செவும், முன்னாள் திமுக அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை தந்துவிட்டு, சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, "தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என வேண்டுக்கோள் வைத்துள்ளோம். சில அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். தண்டராம்பட்டில் ஒரு ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி முற்றிலும் தேர்தல் விதி முறையை மீறியுள்ளார். வேட்புமனு வாபாஸ் பெறும் தேதி முடிந்து, சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பின்பு, மறுநாள் ஒரு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியுள்ளார். இதற்கான ஆதாரத்தை தந்துள்ளோம். இப்படி வெளிப்படையாக தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் வாக்குபதிவின்போது வாக்குசாவடியை கைப்பற்ற ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கையின்போது, ஊராட்சி மன்ற தலைவர்களின் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று முடிந்தவுடன் உடனுக்குடன் ரிசல்ட்டை அறிவித்து, அங்கிருந்து கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 48 மணி நேரம் பொருத்து மொத்தமாக அறிவிக்கிறோம் என அறிவிக்கும்போது, முறைகேடுகளில் ஆளும்கட்சியினர் ஈடுப்பட்டனர்.

அதனால் உடனுக்குடன் ரிசல்ட்டை அறிவித்தால் கூட்டம் குறையும். அதோடு, இணையத்தில் ரிசல்ட்டை வெளியிட்ட பின் தருகிறோம் என்கிறார்கள். இணைய நெட்ஒர்க் என்பது பல நேரங்களில் மிகவும் குறைவான வேகத்தில் செயல்படும், இதனால் பல நெருக்கடிகள். அதனால் எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு வழங்குவது போல் வெற்றி சான்றிதழ்களை வழங்கி விடுங்கள், அதன்பின்னர் இணையத்தில் பதிவேற்றிக்கொள்ளுங்கள் என்கிற கோரிக்கையை வைத்துள்ளோம். தேர்தல் நேர்மையாக செயல்பட உயர் அதிகாரிகள் கண்காணித்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார். 

மாவட்ட ஆட்சியரை சந்தித்தபின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தியை சந்தித்து, இதே கோரிக்கையை வைத்தனர். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் முன்வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்