தமிழக கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே இந்த நிலையா என, தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான புகாரை இன்று (01.03.2021) பிற்பகல் தானாக முன்வந்து விசாரிக்க இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்.
ராஜேஷ் தாஸ், கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாகா குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி. கனிமொழி நேற்று (28.02.2021) சென்னையில் திமுக மகளிரணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், ‘இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும், டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான இந்த பாலியல் புகார் வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்’ என கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.