கலைஞருக்கு மெரினாவில் சிலை அமைக்க தமிழக அரசு போட்ட முட்டுக்கட்டைகளை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள், தி.மு.க.வும் மறக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தி.மு.க.வின் மகளிரணியின் மாநிலச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று (12/02/201) மதுரை மாவட்டம் செல்லூர், ஜம்புராபுரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது புதூரில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கனிமொழி எம்.பி., "தற்போதுள்ள தமிழக அரசு எந்த ஒரு திட்டங்களையும் முழுமையாக முடிக்காமல், பெயரளவிலேயே உள்ளது. தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டும் நாயகர்" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கனிமொழி எம்.பி., "மோடி அரசு பதவி ஏற்ற பின் பொதுமக்கள், விவசாயிகள், ஊடகத்துறையினர் என அனைவரும் முடக்கப்படும் நிலையிலேயே உள்ளனர். மோடி அரசு பதவி ஏற்பதற்கு முன் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தது. தற்போது ஜனநாயகம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
மேலும், தி.மு.க. சார்பில் மதுரையில் கலைஞருக்கு சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., "கலைஞர் இறப்பின்போது மெரினாவில் இடம் கொடுப்பதற்கு தி.மு.க. எத்தனை போராட்டம் நடத்தியது என்பதை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள், தி.மு.க.வும் மறக்காது" எனத் தெரிவித்தார்.