ஈரோடு மாவட்டத்தில், நான்கு நாள் பிரச்சாரத்திற்காக தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி வந்துள்ளார். 30 -ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.
இன்று கவுந்தப்பாடி நால்ரோட்டில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய கனிமொழிக்கு தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதில் தொண்டர் ஒருவர் எம்.பி கனிமொழிக்கு 'வாள்' வழங்கிய பின்னர் 'வெற்றிவேல், வீரவேல்' என முழக்கம் எழுப்பினார். இன்னும், அ.தி.மு.க ஆட்சி 5 அமாவாசைக்கு தான் இருக்கும் எனத் தொண்டர்கள் முழங்கினார்கள். பிரச்சாரம் செய்ய அனுமதியில்லாததால் பயணம் மேற்கொண்ட கனிமொழி சாலையில் நடந்தபடி பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுரை வழங்கினார். மேலும், பி.மேட்டுப்பாளையம் பகுதியில் கடை நடத்திவரும் பெண்மணி மற்றும் கார்மெண்ட்ஸ் நடத்திவரும் பெண்களையும், நைட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெண்களையும் சந்தித்து அவர்களின் தொழில், வருமானம், குடும்ப நலம் பற்றி விசாரித்தார். 'விடியலை நோக்கி' பயணத்தின் நோக்கம் குறித்த கையேடுகளை அவர்களுக்கு வழங்கினார்.