தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்" என்ற தலைப்பில், 16,000 கிராம சபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று முதல் தமிழகம் முழுக்க அந்தந்த பகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே கிராமசபைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்கள். ஈரோட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க, மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பல்வேறு ஊர்களில், "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்" என்ற தலைப்பில் கிராம சபைக்கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டு அதன்படி இன்று 23-ஆம் தேதி, தொடக்க நிகழ்ச்சி நடந்தது. வீரப்பன்சத்திரம் பகுதி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பேசினார்.
கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிசாமி, பகுதிச் செயலாளர் நடராஜன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து, ஊத்துக்குளி மற்றும் மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர் ஆகிய கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இனி ஒவ்வொரு நாளும் மாவட்டம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.கவினர் கூறியுள்ளனர்.