சிதம்பரம் அருகே கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய பெட்ரோல் பங்க் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலக கட்டடங்கள், கிளைகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் பிரதான சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கடலூர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் வரவேற்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மண்டல சில்லறை விற்பனை தலைவர் ராஜேஸ்வரன் திட்ட விளக்கவுரையாற்றினார். காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ம.சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் புதிய பெட்ரோல் பங்கு, நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வேளாண்மை உழவ்ர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், “கூட்டுறவுத்துறை சார்பில் இந்த பெட்ரோல். டீசல் நிரப்புகின்ற நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். அதே நேரத்தில் இனி எதிர்காலத்தில் அதாவது மின் வாகனங்கள் மின்சாரத்தால் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கான அந்த ரீசார்ஜ் செய்கின்ற வசதியையும் அதேபோல எரிவாயுக்களால் இயங்கப்படுகின்ற வாகனங்களுக்கான கேஸ் நிரப்புகின்ற அந்த நிலையத்தையும் மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற ஒரு நல்ல நிலையத்தை இந்த கூட்டுறவுத் துறையின் சார்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். கூட்டுறவுத் துறையின் மூலமாகத் தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான மாதாந்திர உரிமை பொருள்களை வழங்குகின்ற பொறுப்பை இந்த துறை ஏற்ற சிறப்பான செயல்படுத்தி வருகிறது. பல நெருக்கடியான காலகட்டங்கள், இயற்கை சீற்றங்கள் நோய் தொற்றுகள் போன்ற காலகட்டங்களில் எல்லாம் கூட அரசனுடைய திட்டங்களை உதவிகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்ற உங்கள் துறையாக இந்த துறை விளங்கி வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாஸின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல் ஆண்டில் 21- 22 ஆம் ஆண்டுகளில் 10,292 கோடி விவசாயிகளுக்கான பயிர் கடன்கள் வழங்கப்பட்டது. 22-23 ஆண்டுகளில் 13,442 கோடி விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்கப்பட்டது. தற்போது நடப்பு ஆண்டில் (23- 24) ஆம் ஆண்டில் 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்றாண்டு காலத்தில் 40234 கோடி ஆண்டு சராசரியாக 13,416 கடந்த ஆட்சியாளர்களை விட இரண்டு மடங்குக்கு மேற்பட்ட விவசாயக் கடன்களை விவசாயிகளுக்கு வழங்கி சாதனை படைத்துள்ள அரசு தான் திமுக அரசு” எனப்பேசினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: அரசின் ஆதரவு பெற்ற கூட்டுறவுச் சங்க வங்கிகளில் அதிக வட்டி தருவதால் டெபாசிட் செய்யலாம். விவசாயிகளுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்த திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.32 ஆயிரம் ஓராண்டு வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறார்கள். கரோனா தொற்றுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியில் திமுக ஆட்சி பொறுப்பேற்றால், சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்ற விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தார்கள். ரூ.5 ஆயிரம் கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இனிமேல் தள்ளுபடி செய்ய நிதி கிடையாது. எனவே கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்ற விவசாயிகள் கடன் தொகையை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டும். மேலும் தற்போது கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முதன் முதலாக கடலூர் மாவட்டத்தில் அரசு 3.45 லட்சம் வழங்குகிறது. அதற்கு கூடுதலாக பயனாளிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் தலா ரூ.1 லட்சம் இன்றைய தினம் 100 பேருக்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம் எனப்பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், கூடுதல் ஆட்சியர் சரண்யா, கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிஇணைப்பதிவாளர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.