Skip to main content

"அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022


 

"DMK fully supports All India General Strike" - Minister Duraimurugan's statement!

 

தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (17/03/2022) வெளியிட்டிருந்த அறிக்கையில், "நாட்டைக் காப்போம். மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசின் 'தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, நாட்டிற்கு விரோதமான கொள்கைகளை' கண்டித்து வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்க வேண்டும் என தொ.மு.ச. உள்ளிட்ட 10 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தி.மு.க. தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்கள்.

 

இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தம் ஏற்கனவே நடைபெற்று வரும் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களின் தொடர்ச்சியாக, 'தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்' 'தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், அறிவிக்கும் ஒவ்வொரு கொள்கையும், மாநில உரிமைகளை மட்டுமின்றி தொழிலாளர்களின் உரிமைகளையும் அடியோடு பறிக்கும் வகையில் இருக்கிறது. 

 

தொழிலாளர்களின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் விதமாக இருந்து வருகிறது. இத்தகைய அராஜகமான நடவடிக்கைகளும், ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளும், மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மின்சார திருத்தச் சட்டம் உழவர்களின் நலனுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

 

ஆகவே தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க.வின் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என்பதை தி.மு.க. தலைவர் அவர்களிரின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தி.மு.க.வினரும், தி.மு.க. தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பங்கேற்று, தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும், அகில இந்திய பொது வேலைநிறுத்தம் வெற்றி பெற்றிடவும், முழு மூச்சுடன் போராட்டக் களத்தில் நின்று ஆதரவளித்திட வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்