புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க அதிகாரம் உள்ளது. அவர் அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் 'புதுச்சேரி ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் புதுச்சேரி மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது கிரண்பேடியின் கொட்டத்தை அடக்கக்கூடிய தீர்ப்பு. இறுதியாக நீதி வென்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.