இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி (30.05.2024) கன்னியாகுமரி வர உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது இந்தப் பயணத்திட்டத்தின்படி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் 30 ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கன்னியாகுமரி வருகை புரிகிறார். அதன்பின்னர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ஆம் தேதி தியானம் செய்கிறார். ஜுன் 1 ஆம் தேதி தியானம் முடிந்து அன்று மாலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கையில் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இரவு பகலாக மே 30 முதல் ஜூன் 1 வரை தியானத்தில் ஈடுபட உள்ளார் எனத் தெரிவித்தது. இதனால் பிரதமர் மோடி வருகைக்காக கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவின்போது கேதர்நாத் குகையில் சுமார் 17 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.