Skip to main content

முதல்வரே அடாவடித்தனம் செய்யலாமா? -  தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி!

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

 dmk - duraimurugan - questioning - edapadi palanisamy - cm

 

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி வேலூர் வருகை புரிந்தார். இந்த அரசு நிகழ்வுக்கு தி.மு.க.வை சேர்ந்த சட்டமன்ற, நாடாளமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. 

 

இதற்கு கண்டனம் தெரிவித்து வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில், தமிழக முதல்வர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்த வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகளை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம், அழைக்கவில்லை. அதிகாரிகளை மட்டும் வைத்து ஆய்வுக் கூட்டம் நடத்துவார்களோ என நினைத்தோம், ஆனால் அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை என மூன்று மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அவர்களை அழைக்காமல் விட்டுவிட்டனர், இது தி.மு.க.விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிறோம். இது அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமா அல்லது அ.தி.மு.க. கூட்டமா எனத் தெரியவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கதக்கது. திட்டமிட்டு எங்களை ஒதுக்கிவிட்டு ஆய்வுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் மட்டும் கலந்துகொண்டது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 

இது ஜனநாயக விரோத செயல். முதல்வரே இப்படி அடாவடித் தனத்தில் ஈடுபடலாமா? இதுபோன்று நடக்கிறது என்று தெரிந்திருந்தால் கூட்டம் நடத்தியிருக்கமுடியுமா? நாங்கள் மறியலும் கருப்புக் கொடி போராட்டமும் செய்திருப்போம். இது திருட்டுத்தனமாக தாலி கட்டிய செயலாகும். தற்போது எங்களை எல்லாம் அழைத்திருந்தால் குடிநீர்ப் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை ஆகியவற்றை சுட்டிகாட்டி மக்களின் குறைகளை எடுத்துக் கூறியிருப்போம்.

 

http://onelink.to/nknapp

 

பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் பாலம், வேலூர் சுற்றுசாலை, ஆம்பூர் சுற்றுசாலை உள்ளிட்டவற்றையெல்லாம் நாங்கள் எடுத்துக் கூறியிருப்போம். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அனைத்துக் கடிதங்களையும் ஹிந்தியில் எழுத வேண்டும் என துணை வேந்தர் வற்புறுத்துவதையும் அகரம் ஆறு தூர்வாரப்பட வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியிருப்போம். குறிப்பாக பொதுக் கணக்கு தணிக்கை குழுவின் தலைவரான என் தலைமையில் மாவட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சியில் பலகுறைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி அதனை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னவர் இதுவரையில் செய்யவில்லை.

 

இதையெல்லாம் முதல்வருக்கு எடுத்துக் கூறியிருப்போம். அப்படிச் செய்ய முடியாமல் எங்களைத் திட்டமிட்டு தவிர்க்க வைத்த முதல்வரைக் கண்டிக்கிறோம். சட்டமன்றத்தில் தி.மு.க. இப்பிரச்சணையை எழுப்பும் என்று கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்