தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று (27/02/2021) அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், "இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (26/02/2021) மாலை தேர்தல் தேதியை அறிவித்தது. நேற்றைய தினம் முதலே தமிழகத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் நேற்று (26/02/2021) மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடைப்பிடித்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இனி நடத்தப்பட மாட்டாது. அனைத்து அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். பொதுமக்களுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு 'பாக்ஸ்' வைக்கப்படும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் '1077' என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த எண்ணைப் பயன்படுத்தி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் '2267672' என்ற டி.ஓ.டி. எண் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 8 ஆர்.ஓ.க்கள் (RO's) அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (27/02/2021) மாலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பான தகவலைப் பரிமாறுவார்கள். நகரப் பகுதிகளில் எந்த ஒரு சுவர் விளம்பரமும், தட்டியும் வைக்க அனுமதி இல்லை. ஆனால், அதே நேரத்தில் கிராமப்புறங்களில் மட்டும் தனியார் இடங்களில் விளம்பரம் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு அந்த கட்டிட உரிமையாளர் அனுமதியும், அந்தப் தொகுதி ஆர். ஒ.க்களிடமும் அனுமதி பெற வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரூபாய் 30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் முதலில் 2,265 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கரோனா காலகட்டம் என்பதால் 1,050- க்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதலாக 526 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2,741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 926 இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 13 ஆயிரத்து 157 அரசு அலுவலர் பணியாளர்களும், 193 மைக்ரோ அப்சர்வர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நமது மாவட்டத்தைப் பொறுத்தவரை 80 வயதுக்கு மேல் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். இவர்களுக்குத் தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பினால் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்றும் வாக்குப்பதிவு செய்யலாம். அதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 157 பேர் உள்ளனர். ராணுவ வீரர்கள் 298 பேர் உள்ளனர். மற்றவர்களுக்கு எவ்வாறு ஓட்டு அளிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். கோபி சத்தியமங்கலம் தொகுதிகளுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு எண்ணப்படும். அதேபோன்று மற்ற 6 தொகுதிகளுக்கும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.யிலும் வாக்குகள் எண்ணப்படும். மாவட்டத்திலுள்ள 2,741 வாக்குச்சாவடி மையங்களில் 111 வாக்குச்சாவடி மையங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. 18 வாக்குச்சாவடி மையங்களில் இணையதள வசதி இல்லை. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வீடியோ மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
மாவட்டம் முழுவதும் 76 ஹெல்த் பிரைமரி சென்டர்கள் உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அதேபோன்று வாக்காளர்கள் கிளவுஸ் அணிந்து தான் வாக்குகளைப் பதிய வேண்டும். இதற்காக ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஒரு கிளவுஸ் வழங்கப்படும். தனிமனித இடைவெளியும் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தைப் பொறுத்தவரை பறக்கும் படையினர் தங்களது பணியைத் தொடங்கி விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் கடந்த கால தேர்தல் அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுள்ளது. மாநகர்ப் பகுதியில் அரசு கட்டிடத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரம் அழிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அது அவர்கள் விருப்பம்." என்றார்.