Skip to main content

''மாஸ்க்குடன் பேசியதால் வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம்'' - தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

DMK DURAIMURUGAN INTERVIEW

 

அண்மையில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் எங்கள் கூட்டணியில் தற்போது இருப்பவர்கள் எப்பொழுதுமே கூட்டணியில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில்  வேறு இயக்கங்களுக்கு அவர்கள் செல்ல வாய்ப்பிருக்கிறது, என்ற கருத்தை ஒருமையில் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், 

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது இப்படிப் பேசியதாக வெளியான கருத்துகளை நானும் பத்திரிகையில் படித்தேன். அவர் நேரடியாக என்ன பேசினார் என்ற தகவல் எனக்குத் தெரியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசுவது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையது அல்ல. அது கூட்டணிக் கட்சியாக இருக்கலாம், எதிர்க்கட்சியாக இருக்கலாம். கட்சித் தலைவர்களை ஒருமையில் பேசுவது என்பது ஒரு பொருத்தமானதல்ல. அப்படி அவர் பேசி இருந்தால் நிச்சயமாக வருத்தத்திற்குரியது. அது ஒரு நல்ல நடைமுறை இல்லை.

 

dmk duraimurugan


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான கூட்டணி அமைப்பது என்பது பற்றி இதுவரை எந்த மாதிரியான இறுதி முடிவுக்கும் வரவில்லை. எப்பொழுதுமே எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்கும் போதுதான் அந்த மாதிரியான முடிவுகளுக்கு நாங்கள் வருவோம். எங்களைப் பொறுத்தவரை மக்கள் பிரச்சினையில் பா.ஜ.க அரசையும், அ.தி.மு.க அரசையும் எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இதே சூழல் வருகின்ற தேர்தல் கூட்டணியாக நீடிக்கலாம். ஆனால் இறுதியான முடிவு என்பது தேர்தல் நெருங்கும் போதுதான் சொல்ல முடியும். இதை துரைமுருகன் தனிப்பட்ட முறையில் சொன்னாரா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகச் சொன்னாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்  என்றார்.

 

Ad


இந்நிலையில் யாரையும் ஒருமையில் பேச வில்லை என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை. மாஸ்க் அணிந்து பேசியதால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். என்னுடைய பேச்சு யாருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின், எனது பேச்சு நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இனி இப்படி நிகழா வண்ணம் நடந்து கொள்வேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்