நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட், மற்றும் சாதாரண அவசரக் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் பிப் 28 காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடி நெல்லை வருகையின் காரணமாக பட்ஜெட் கூட்டம் மாலை 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாலை குறிப்பிட்ட நேரத்தில் நெல்லை மாநகராட்சி மன்ற அரங்கத்திற்கு மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, கமிசனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரில் 2 வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி தன் கைகுழந்தையுடன் வந்திருந்தார். தி.மு.க. கவுன்சிலர்கள் நான்கு பேர், காங்., கம்யூ கட்சிகளின் கவுன்சிலர்கள் என 55 கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்
மாலை நான்கு மணி கடந்தும் போதிய கவுன்சிலர்கள் ஆஜராகாததால், அரங்கத்திற்கு வந்த மேயர் சரவணன் பட்ஜெட் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கவுன்சிலர் சந்திரசேகர் மாலை 6 மணி ஆகியும் கூட்டம் தொடங்கவில்லை, தி.மு.க.கவுன்சிலர்கள் வராமல் புறக்கணித்து விட்டார்கள். மக்களின் பிரச்சினைகள், வார்டு பணிகள் பற்றிப் பேச தி.மு.க.கவுன்சிலர்கள் வராதது கண்டிக்கத்தக்கது. மக்களுக்கான பணிகள் முடங்கியுள்ளன என்றார், ஆவேசமாக.
இதனால் மாமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சியில் மேயர், கவுன்சிலர்களுக்கிடையேயான மோதலின் விளைவுதான் மாமன்றக் கூட்டம் முடங்குமளவுக்குப் போனது. அரசு தலையிட்டு இந்த விவகாரத்திற்கான தீர்வு காண்பது அவசியம். இது நடக்காத பட்சத்தில் மாமன்றத்தின் செயல்பாடுகளும், மக்கள் பணிகளும் கேள்விக்கிடமாகி விடும். மாநகரமே பாதிக்கப்படும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
தி.மு.க. கவுன்சிலர்களில் சிலரிடம் பேசிய போது, புயல் வெள்ளத்தால் நெல்லையில் பெரும்பாலான வார்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை மேம்படுத்த மேயரின் கவனத்திற்கு கோரிக்கை வைத்தும் அவர் தனக்கு ஆதாயமான வார்டுகளையே கவனிக்கிறார். பிற வார்டுகளைப் புறக்கணிக்கிறார். மேயரின் இத்தகைய போக்கினால் தான் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணித்தோம் என்கிறார்கள்.