ஏற்காடு நீதிமன்ற நீதிபதி வீட்டிலேயே 20.50 பவுன் நகைகளை திருடியதாக வேலைக்கார பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவராக பணியாற்றி வருபவர் சரவணன். இவருடைய மனைவி லட்சுமி பிரபா (43). இவர் நீதிமன்றத்தில், கடந்த அக். 30ம் தேதி ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், 'கடந்த செப்டம்பர் மாதம் திருமண விழாவிற்குச் செல்வதற்காக வீட்டு அலமாரியில் வைத்து இருந்த 20.50 பவுன் நகைகளை அணிந்து சென்றேன். மறுநாள் அந்த நகைகளை கழற்றி மீண்டும் அலமாரியில் இருந்த இடத்திலேயே வைத்து விட்டேன். பின்னர் அக். 30ம் தேதி அலமாரியைத் திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. அவற்றைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விரல்ரேகை நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் நீதித்துறை நடுவர் வீட்டில் வேலை செய்து வரும் சேலம் சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மனைவி சுகன்யா (30) என்பவர், வீட்டு அரிசி பாத்திரத்தில் 14 பவுன் நகைகள் இருந்ததாக எடுத்து வந்து கொடுத்தார்.
இதனால் அவரிடம் சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர், அலமாரியில் இருந்த 20.50 பவுன் நகைகளையும் தான்தான் எடுத்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர், வீட்டில் ஒளித்து வைத்து இருந்த 6.5 பவுன் நகைகளையும் எடுத்து வந்து காவல்துறை வசம் ஒப்படைத்தார். இதையடுத்து சுகன்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.