தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 68 நாட்களுக்கு பிறகு இன்றும் நான்காவது நாளாக கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது. இரண்டாயிரத்தை நெருங்கும் அளவிற்கு ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,986 ல் இருந்து 1,990 ஆக அதிகரித்துள்ளது. கரோனா ஒருநாள் பாதிப்புபாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவையில் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டும். கோவையில் முக்கிய சாலைகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிடலாம். இரவு பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். மார்க்கெட்களில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.