சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள விடுதியில் எழிலரசி (30) என்ற பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவரது கொலையில் சம்மந்தப்பட்ட கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட பெண் எழிலரசி கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காஞ்சரங்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தனர். மேலும், அவர் வைத்திருந்த செல்ஃபோன் மூலம் அவரை தொடர்புகொண்டவர்களை தேடிப் பிடித்து விசாரணை செய்ததில், கொலையாளி இளங்கோ (21) பிடிபட்டுள்ளார். தீவிர தேடுதலுக்குப் பின்பு பிடிபட்ட இளங்கோவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “எழிலரசியின் ஊரைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை என்ஜின் துறையில் பணிபுரிந்துவருகிறார். நான் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலை தேடிச் செல்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தேன். இதற்கிடையே, எனது வயலில் விவசாயப் பணிகளை செய்துகொண்டிருந்தேன். எங்கள் நிலத்தின் பக்கத்தில் உள்ள நிலத்தை சேர்ந்தவர் எழிலரசி. அடிக்கடி எனது நிலத்திற்கு விவசாய பணிகளுக்காக செல்லும்போது இருவரும் பேசி பழகினோம். அதோடு, எங்கள் வீட்டிற்கு எழிலரசி தினசரி தனது குழந்தைகளுக்குப் பால் வாங்குவதற்காக வருவார். இதனால் எங்கள் இருவருக்கும் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
அந்தப் பழக்கம் இருவருக்குமிடையே காதலாக மாறியது. மேலும், எழிலரசியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் எங்கள் இருவருக்கும் இடையே காதல் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்தது. இதற்காக அடிக்கடி இருவரும் வெளியூர்களுக்குச் சென்று விடுதியில் அறை எடுத்து தனிமையில் இருந்துவிட்டு ஊருக்குச் செல்வது வழக்கம். இது கடந்த ஒருவருடமாக நீடித்துவந்தது. இந்த நிலையில், எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்காக பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் செல்வதற்கு தயார் நிலையில் இருந்தேன். இது குறித்து எழிலரசியிடம் தெரிவித்தபோது, அவருக்கு நான் வெளிநாடு செல்வது பிடிக்கவில்லை.
நீ வெளிநாடு செல்லக் கூடாது என்னுடனேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்திவந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை எனக்கு ஏழிலரிசி ஃபோன் செய்தார். நான் சேலத்தில் இருப்பதாகக் கூறினேன். அப்போது எழிலரசி, ‘என்னிடம் இருக்கும் பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு புதிய நகை வாங்க வேண்டும். அதற்காக நான் ஆத்தூர் வருகிறேன். நீ சேலத்திலிருந்து ஆத்தூர் வந்துவிட வேண்டும்’ என்று கூறினார். அதன்படி இருவரும் ஆத்தூரில் சந்தித்து அங்குள்ள ஒரு நகைக்கடையில் எழிலரசி தனது பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக்கொண்டார். அதன் பிறகு இருவரும் தனிமையில் இருப்பதற்காக அப்பகுதியில் உள்ள லாட்ஜுக்கு சென்றோம்.
அங்கு எனது பெயரை ராஜா என்று மாற்றிக்கொடுத்து இருவரும் அறை எடுத்துத் தங்கினோம். அங்கு இருவரும் தனிமையில் இருந்தோம், பிறகு எழிலரசி என்னிடம், ‘நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது. என் கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு நான் உன்னோடு வந்துவிடுகிறேன். இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்வோம். இதற்கு நீ சம்மதிக்காவிட்டால் நமக்குள்ள தொடர்பை ஊரில் உள்ளவர்களிடம் வெளிப்படுத்துவேன்’ என்று கோபத்துடன் கூறினார். எங்கள் காதலை எழிலரசி ஊரில் உள்ளவர்களிடம் கூறினால் அது பெரிய அவமானமாக ஆகிவிடும். நான் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் லட்சியமும் ஈடேறாது. இனிமேல் எழிலரசியை உயிரோடு விட்டுவைக்கக் கூடாது என்று முடிவு செய்து அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.
பின்னர் அவரது சேலையால் கழுத்தில் போட்டு இறுக்கிக் கட்டிலில் சேர்த்து கட்டிவிட்டு, அறையைவிட்டு வெளியே வந்தேன். அப்போது அங்கிருந்த ஊழியர் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டபோது, எங்கள் இருவருக்கும் டிஃபன் வாங்கப் போவதாக கூறிவிட்டு தப்பிவிட்டேன்”. மேற்கண்டவாறு போலீசாரிடம் இளங்கோ வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இளங்கோவிடமிருந்து மூன்றரை பவுன் நகையைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்த ஆத்தூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஒரு இளைஞரின் தவறான செயலால் அவரையும் சிறைக்கு அனுப்பி, மூன்று குழந்தைகளும் கணவனும் இருக்கும்போது அந்தப் பெண் தடம் மாறிச் சென்றதன் விளைவு தற்போது கொலையில் முடிந்துள்ளது.