வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கி ஒரு தலைபட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
மன்ற கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் ஆளும்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்து வெளியே வந்தனர். சில கவுன்சிலர்கள் ஆல்ரெடி பாய், தலைகானியோடு வந்திருந்தனர். அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வராண்டாவில் கறுப்பு பேட்ச் அணிந்துக்கொண்டு தரையில் பாய் போட்டு அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் நடத்திய பேச்சுவார்த்தையில், மற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செயல்படுவது போல் அனைவரையும் சமமாக கருத வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தின் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒதுக்குவது போல் கவுன்சிலர்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றனர். குடியாத்தம் நகர போலீசாரும் சமாதானம் பேசினர். இதனால் சமரசம் ஏற்பட்டு ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாநிலத்தின் ஆளும்கட்சி திமுக, தொகுதி எம்.எல்.ஏ திமுக, ஒன்றியக்குழு தலைவர் திமுகவாக இருந்தாலும் இந்த ஒன்றிய அலுவலக நிர்வாகத்தை அதிமுக பிரமுகர்களே நடத்துகிறார்கள், இதற்கு சில திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள். அதிமுக பிரமுகர்கள் ஊராட்சி மனற் தலைவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் வழியாக அதிமுக பிரமுகர்கள் தங்களது தேவைகளான ஒப்பந்தம், பணிகள் போன்றவற்றை சாதித்துக்கொள்கிறார்கள். இது அடிக்கடி உள்ளுக்குள் நடந்த மோதல் இந்த பிரச்சனை குறித்து தெரிந்தும் வேலூர் மாவட்ட முக்கிய புள்ளிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கவுன்சிலர்கள் வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துவிட்டார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த போராட்டத்தால் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.