காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டுலதான ஜெயிச்ச," இப்படி எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய நகராட்சி சேர்மனின் அதிரடி மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தை அதிரவிட்டிருக்கிறது.
மயிலாடுதுறை அருகே உள்ள ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டிடம் 4.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குமாடியில் கட்ட திட்டமிடப்பட்டு, அதன் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரத்தில் பேசிய குண்டாமனி," இந்த இடத்துக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எப்படி கட்டிடம் கட்டுவீர்கள் என பார்க்கின்றேன்? உங்கள் சௌரியத்திற்கு நினைத்துக்கொண்டு இருக்கிறதுக்கு நாங்கள் என்ன.... நெனச்சியா? எம்பி கிட்ட சொன்னீர்களா? எம்பி என்ன செத்தா போயிட்டாரு? சேர்மேன் கிட்ட சொன்னீர்களா? என்ன அர்த்தத்தில் செய்றீங்க? யார கேட்டு செய்றீங்க? தப்பா பண்றீங்க எம்பி என்ன செத்தா போயிட்டாரு தேதி அறிவிச்சிட்டாங்களா? இதையெல்லாம் கேட்டா நான் பொல்லாதவனா? எந்த அடிப்படையில் செய்றீங்க நீங்க தப்பா பண்றீங்க? நகராட்சியில் பாதி இடம் தான் தீர்மானம் வச்சிருக்கு, பாதி இடத்திற்கு தீர்மானம் இல்லை என்றால் வேற மாதிரி செஞ்சிடுவேன்." என்றவர்,
மேலும்,"தலைய தலைய ஆட்டுனா, என்ன அர்த்தம் சொல்றது இல்லையா. யார்கிட்டயும் சொல்லாமல் திருட்டுத்தனமா பண்றீங்களா? தலைவர் அறிவித்த திட்டம் தானே முதலமைச்சர் தானே நிதி கொடுக்கிறார். நாலு பேரு கிட்ட சொல்ற. அதனால உனக்கு என்ன சங்கடம்? நீ ஒப்பந்தக்காரர் தானே மாவட்டத்திடம் சொன்ன அடுத்தபடியா யார் கிட்ட சொல்லணும் என இன்ஜினியரிடம் கேட்டார்.
காலேஜ்ல பூஜைக்கு யார் யாருக்கெல்லாம் சொல்லணும் சொல்லிடுறேன்னு சொன்னாங்க என்று இன்ஜினியர் கூறினார். அதற்கு நகர மன்ற தலைவர் ப்ரோட்டகால் முறையில் பண்ணிட்டீங்களா? எல்லா எம்எல்ஏவுடையே முடிஞ்சிடுச்சா? எம்எல்ஏ சொல்ல மாட்டாருங்க எம்எல்ஏ இன்னைக்கு இருந்துட்டு போயிடுவாருங்க எம்எல்ஏ காங்கிரஸ் ஓட்டுலயா ஜெயிச்சாரு? திமுக ஓட்டு வாங்கி தானே ஜெயிச்சாரு எம்எல்ஏவுக்கு என்ன? திமுககாரன் யாருமே கிடையாது திமுக காரன் எல்லாம் சின்டு புடிச்சிட்டு நிக்கணும் அடிச்சிட்டு நிக்கணும்? என இன்ஜினியரிடம் ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்எல்ஏ ராஜகுமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமாரிடம் சென்று," இன்னும் நிறைய பேசுவேன் நீ வந்தது தப்பு. நீ எம்எல்ஏ தானே நீ வந்தது தப்பு எப்படி வந்த? நான் ஒரு சேர்மன் இருக்கேனே உன்னை ஜெயிக்க வைத்தது யார் மயிலாடுதுறையில். உனக்கு ஒருத்தன் ஓட்டு கேட்டானா? உன்ன நான் தான் ஜெயிக்க வச்சேன். வயிற்றெரிச்சலா இருக்கு, உன் காரையே உள்ள விடமாட்டேன். என் ரத்தம் எல்லாம் கொதிக்குது உன் எண்ணத்தில் இடி உழுவோ, திமுக காரங்க அடிச்சிட்டு நிக்கணும் நீ மட்டும் காரில் சொகுசாக போகனுமா? சண்டை போட்டு டிவில வரணும் அதை பாக்கணும். இது ஒரு தலைவர் நிகழ்ச்சி தானே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு செஞ்சா என்ன? எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி அடுத்த அரைமணி நேரத்தில் டபீர் தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருவரும் இணைந்து விலையில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி கலந்துகொண்டு ஒன்றாக சைக்கிள்களை வழங்கியதோடு, பேசி சிரித்துக் கொண்டனர், இதை கண்ட பலரும் அது வேற வாய், இது நார வாய் என கமெண்ட் அடித்துக்கொண்டனர்.