தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு வரும்போது அளித்த வாக்குறுதிகளை விஷால் அணியினர் நிறைவேற்றவில்லை என்றும், தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. பினனர் சென்னை தியாகராய நகரில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
போராட்டத்துக்குப் பின் பல திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கும் போது, இரும்புத்திரை என்ற தாம் நடித்த படத்தை தயாரிப்பாளர் சங்கப் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி விஷால் வெளியிட்டுள்ளார். விஷால் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் பதவியிலிருந்து இறக்கும் சூழல் உருவாகும் என ஜே.கே.ரித்தீஷ் எச்சரித்தார்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு தென்னிந்திய எனத் தொடங்கும் பெயருக்கு பதில் தமிழ் என மாற்ற வேண்டும் என பாரதிராஜா வலியுறுத்தினார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்த போது விஷால் அணியினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தயாரிப்பாளர் ராஜன் குற்றம்சாட்டினார். தில்லு முல்லு செய்யும் தயாரிப்பாளர் சங்க அமைப்பு தேவையா? என ராதாரவி கேள்வி எழுப்பினார்.
இதுவரை தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து விஷால் வெளியிடாததற்கு காரணம் அவர்களுடனான டீலை விஷால் முடித்துக்கொண்டதுதான் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
டி. ராஜேந்தர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? தமிழ் ராக்கர்சை பிடித்து விட்டேன். நெருங்கி விட்டேன் என்றெல்லாம் கூறினார். எங்கே போனார்கள் தமிழ் ராக்கர்ஸ். ஏன் இன்னும் சொல்ல வில்லை.
எங்கே போனது ரூ.7 கோடி வைப்புநிதி? பதில் சொல்ல முடியுமா? பொதுக்குழுவை நடத்த முடியாதபோது, ஸ்டிரைக் நடத்தியது ஏன்? ஒரு படத்திற்கு 200 திரையரங்குகள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு, அவருடைய ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார்.
க்யூப் கட்டணம் குறைப்பதற்காக விஷால் ஸ்டிரைக் நடித்தினார். ஆனால், க்யூப் கட்டணம் குறைந்ததா? என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், மூத்த உறுப்பினர்கள் பிரிந்து கிடப்பதால் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள். இந்தநிலை மாற வேண்டும்’ என்றார்.