கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரின் மையப்பகுதியில் கடந்து செல்கிறது மணிமுத்தாறு. 'காசிக்கு வீசம் பெரிது' என போற்றப்படுவது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். ஆலயத்தை ஒட்டி ஓடும் புன்னிய நதியான மணிமுத்தாறில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால் காசியை விட புண்ணியம் கூடுதலாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அப்படிபட்ட ஜீவநதி அருகிலுள்ள மாரி ஓடையில் சாக்கடை கழிவு நீர் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக கூவமாக மாரிவரும் அவலம் நிகழ்கிறது. ஆற்றங்கரையில் உள்ள தீர்த்தமண்டப தெருவில் வசிக்கும் பொது மக்கள் ஊற்று தோண்டி அந்த நீரை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர்.
புன்னிய நதி கூவம் போல மாறியுள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் விஷ கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் பரவும் அபாயம் இருப்பதால் அப்பகுதி வாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மணிமுத்தாறை தூய்மை படுத்த கோரியும், ஆற்றங்கரை மக்களுக்கு சுத்தமான குடிநீரும், சுகாதார முகாமும் நடத்த வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆற்றங்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எ.நா.அறிவழகன் தலைமையில் நடந்த அடையாள ஆர்ப்பாட்டத்தின் போது உடனடியாக நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரி செய்யவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தபடும் என தெரிவிக்கப்பட்டது.