திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 18 வார்டுகளுக்கான தேர்தலில் 27 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் வத்தலக்குண்டில் 11வது வார்டு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக நகரச் செயலாளர் பீர் முகமதுவும், திமுக வேட்பாளர் தர்மலிங்கமும் நேரடியாக களம் காண்கின்றனர். தேர்தல் களத்தில் பீர்முகமது 2 பச்சை தாளினை மட்டும் கொடுக்க, தர்மலிங்கம் ஒரு ரோஸ் தாளினை கொடுத்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக தர்மலிங்கம் காலையில் பால், மாலையில் சேலை, மறுநாள் காலையில் பிரியாணி, அரிசி மூட்டை, ஒரு கிலோ சிக்கன் என வாக்காளர்களை யோசிக்க விடாமல் திணறடித்துள்ளார்.
அதிமுக நகரச் செயலாளரை வீழ்த்த வேண்டுமென்ற திமுக மாவட்ட தலைமையின் அசைன்மென்ட் ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகனால் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 11வது வார்டில் அதிக அளவிலான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிக்க தொடங்கியுள்ளனர். அந்த வார்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 18-வது வார்டு திமுக வேட்பாளர் சிதம்பரம், அந்த வார்டு வாக்காளர்களின் மனங்களை குளிரச்செய்து அவர்களின் மனங்களில் எழுப்பப்பட்டிருந்த அதிமுக என்ற மாயகோட்டையை சுக்குநூறாக உடைத்து திமுக கொடியை நாட்டியுள்ளார். வத்தலக்குண்டு பேரூராட்சிகள் அனைத்து வார்டுகளையும் கைப்பற்றும் முனைப்பை திமுக காட்டி வருகிறது.