தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் பழனிமாணிக்கம் - டிகேஜி நீலமேகம் ஆகியோர் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அண்ணாசிலை மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் சென்று பழனிமாணிக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அண்ணாதுரையிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கலுக்காக காத்திருந்த தொண்டர்கள் நேரம் ஆனதால் வெயில் தாங்க முடியாமல் திரும்பினார்கள். எமகண்டம் முடிந்து ஆட்சியர் அலுவலகம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் வேட்பாளர் பழனிமாணிக்கம்..
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காவிரி டெல்டா பகுதியை ஒட்டுமொத்தமாக சூறையாட மத்திய அரசு தயாராக உள்ளது. மக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பாஜக மற்றும் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.
நான் வெற்றி பெற்றால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நீண்ட கால கடன்கள் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுப்பேன். ஒரத்தநாட்டில் கலைக்கல்லூரி மட்டும் உள்ளது. அங்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்கி மகளிர் பல்லைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.
காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தஞ்சையில் விமான படை தளம் உள்ளது. பயணிகள் செல்வதற்கு வசதியாக மாற்றம் செய்து தஞ்சையில் இருந்து விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்கள் எதிர்க்கும் சாகர்மாலா திட்டம், விவசாயிகள் எதிர்க்கும் மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை கைவிட்டு, மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சையில் ஏற்படுத்தப்படும் என்றார்.
அதே போல தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் மாஜி வைத்திலிங்கம் எம்பியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு.. டெல்டா மாவடத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கவும் எயிம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவேன் என்றார்.