Skip to main content

கடலூர் பாமக வேட்பாளரை ஆதரித்து பேசிய தமாகா தலைவர் வாசன்! பாமக ஆர்வம் காட்டாததால் அதிருப்தி!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

அதிமுக கூட்டணியில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் நேற்று இரவு கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் பேச வந்ததால்  அதிமுக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் கொடி பிடித்தபடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஜி.கே.வாசன் வருகைக்காக கூடியிருந்தனர். ஆனால் வேட்பாளர் கட்சியான பா.ம.கவை சேர்ந்த கட்சி தொண்டர்களோ,  கட்சிக்கொடிகளோ வாசன் வரும் வரை அவ்விடத்தில் இல்லை. மேலும்   வேட்பாளர் கோவிந்தசாமியும்  அவ்விடத்திற்கு வரவில்லை அதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு ஜி.கே.வாசன் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் வந்து சிறிது நேரம் வாகனத்திற்கு உள்ளே அமர்ந்தபடி வேட்பாளர் வருகைக்காக காத்திருந்தார்.

 

 

நேரம் கடக்கவே ஜி.கே.வாசன் பேசத் தொடங்கி கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பெயரை கூறிக் கொண்டிருந்த பொழுது வேட்பாளர் கோவிந்தசாமி வந்து பிரச்சார வாகனத்தில் ஏறி வாசனுடன் நின்றார். பா.ம.க கட்சிக் கொடி மற்றும் வேட்பாளர் காலதாமத வருகையால்  த.மா.கா மற்றும் கூட்டணி கட்சியினர் குழப்பமடைந்தனர்.

 

 

jk vasan cuddalore election campaign

 

 

பின்னர் பேசிய  ஜிகே வாசன் "இந்த தேர்தலிலே ஒரு நல்ல கூட்டணியை அதிமுக ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிற பா.ஜ.க  கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு  காரணம், இன்றைய இந்திய மக்களுடைய தேவை இந்தியாவுடைய நலன், பாதுகாப்பு, வளர்ச்சி, ஒற்றுமை,  ஒருமைப்பாடு. நாட்டை காக்க கூடிய வல்லமை பெற்ற ஒரு அரசு இந்தியாவிற்கு தேவை. அந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அரசு பாரதிய ஜனதா அரசு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.  நமக்கு நாடும்,  நாட்டு மக்களும்தான் முக்கியம். இதைவிட முக்கியம் வேறு எதுவும் கிடையாது என்பதாலேயே ஒத்த கருத்தில் இணைந்திருக்கிறோம்.

 

 

 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி உங்களிடம் தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

 

 

  

மதவாதத்தை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இனிமேல் இந்தியாவில் தகுதியே கிடையாது.  தமிழகம் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்பது நாடாளுமன்றத் தொகுதியை பெற்றதில் ஒரு இஸ்லாமியரையோ,  கிருத்துவரையோ வேட்பாளராக நிறுத்த முடியாத கட்சியாக இன்றைக்கு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மதவாதத்தின் பெயரிலே மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டணி,  திமுக - காங்கிரஸ் கூட்டணி.

 

 

 

இவைகளை முறியடிக்கக் கூடிய தேர்தல் தான் இந்த தேர்தல். இந்த தேர்தலிலே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. சாதி, மதம்,  இனம்,  மொழி,  பிராந்தியம் இவைகள் எல்லாம் தாண்டி மக்களுடைய வளர்ச்சியும், நலனும்தான் முக்கியம். இதன் அடிப்படையில் தான் நாடு வளரும் முன்னேறும்.  இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கூட்டணிதான் அ.தி.மு.க கூட்டணி. 

 

 

 

 

இனி வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமல்ல,  இந்தியாவில் உள்ள  பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சிக்கும்  ஒத்த கருத்துடைய ஆட்சிகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்