சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7-வது வார்டுக்கு உட்பட்ட மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். இவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜாண்சிராணியும் அதே பள்ளியில் வாக்களித்தார்.
பின்னர் வாக்குசாவடிக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டணியில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்தாமல் இருந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பரவலை கொடுக்க அதிமுக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு ஒரு கொள்ளை ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் நகரங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மேம்பாடு போன்ற எந்த திட்டங்களும் சரிவர செயல்படுத்தப்படவில்லை. தெருவிளக்குகள் கூட சரிவர எரியவில்லை. உள்ளாட்சிகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான் நல்ல நிர்வாகம் மேம்படும். மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் நகராட்சி நிர்வாகம் சீரழிந்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகர்ப்புற வளர்ச்சிக்காக உள்ளாட்சி ஒருங்கிணைந்த சட்டத்தை தமிழக முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
கேரளா போன்ற மாநிலங்களில் உள்ளதைப்போல உள்ளாட்சிகளுக்கு அதிக நிதியும், அதிக அதிகாரமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதை அனைத்து மாநகராட்சி நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.