தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும் என்று தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில், "பொறுப்பில் இருந்துக் கொண்டு பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும். பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆளுநர் விரும்பினால் அவர் பதவி விலக வேண்டும். ஆளுநர் உதிர்க்கும் அபத்த கருத்துகளுக்கு எதிராகப் பலர் சொல்லும் விளக்கங்களை அவர் ஏற்றதாக தெரியவில்லை. ஆளுநர் ரவி பேசுவது அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா? வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பேசுகிறார் என்றே பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.