Skip to main content

“கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, எனது இடத்தை எடுத்துக்கொள்ளலாம்...” விஜயகாந்த் உருக்கம்

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

  33

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒருநாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள்.

இப்படி இருக்கும்போது மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து, மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும். கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள், தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.,
 

 nakkheeran app



உடலை அடக்கம் செய்வதால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும், ஓட்டுனர் உள்பட மற்றவர்களை தாக்குவதும் கண்டனத்துக்கு உரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து, இனிமேல் இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களைதான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை, உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்