இன்னும் 3 மாதங்கள் கழித்து வரக்கூடிய தீபாவளி பண்டிகை குறித்து, இந்த கரோனா காலக்கட்டத்தில் சிந்திப்பவர்கள் வெகு சிலரே! அவர்களின் கவலை, தங்களின் தீபாவளி கொண்டாட்டம் குறித்ததாக இருக்காது. பொதுமக்கள், தீபாவளி கொண்டாட வேண்டுமே என்பதாகத்தான் இருக்கும். ஏனென்றால், தீபாவளி பண்டிகையை நம்பியே தொழில் நடத்துபவர்களாக அவர்கள் உள்ளனர்.
தோராயமாக, இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும், 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரமே, முழுக்க முழுக்க இந்தப் பட்டாசு தொழில்தான்! சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், இன்று (19/08/2020) தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்தார்கள். ‘பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தீபாவளி திருவிழா கொண்டாட துணை நிற்போம்!’ என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.