கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக அங்கு நடைபெற்ற கலவரத்தில் பேருந்துகள், பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை மறுசீரமைப்பது தொடர்பாக ஆட்சியர் முடிவெடுக்க கடந்த 24/09/2022 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளியை சீரமைக்க அனுமதி வழங்கி இருந்தார்.
அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், காவல்துறையின் கண்காணிப்பில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு 45 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து பள்ளியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்,செயலாளர் சாந்தி ரவிக்குமார் உடனிருந்தனர். அண்மையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த பள்ளி நிர்வாகிகள் தாளாளர் ரவிக்குமார்,செயலாளர் சாந்தி ரவிக்குமார் உள்ளிட்டோர் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த மனுத் தாக்கல் செய்த நிலையில் அவர்களுக்கான ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.