
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வீச ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்துள்ளது. அதில் வெளியே செல்லும் பொதுமக்கள், கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி முகக் கவசம் அணியாமல் செல்பவர்கள் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீதும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களிடமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடத்திலும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அபராதம் வசூல்செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் துறைவாரியாக இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். வட்டார மருத்துவ அதிகாரி, பேரூராட்சி செயல் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் தினமும் 5,000 ரூபாய் கட்டாயம் அபராதம் வசூலித்தாக வேண்டும். அதேபோல், மாநகராட்சி அதிகாரி ஒவ்வொருவரும் 20 ஆயிரம் ரூபாய் கட்டாயம் அபராதம் வசூலிக்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 10,000 ரூபாயும், நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டாயம் வசூலித்து அரசு கணக்கில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.