துப்புரவு பணியில் ஈடுபட்ட மூதாட்டிக்கு இளநீர் கொடுத்து இளைப்பாற வைத்த மாவட்ட ஆட்சியரின் செயல் வெகுவாகப் பாராட்டுகளை பெற்று வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் ‘நம்ம ஊரு சூப்பர்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் இன்று தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டார். அப்போது சந்தை மைதானத்தில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “திருப்பத்தூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும்.” என்று பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். “பிளாஸ்டிக் வாழையிலை பயன்படுத்துவதால் மனிதனுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. பொதுமக்கள் வாழை இலையை பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாக விவசாயிகள் பயனடைவர்” எனவும் பேசினர்.
அப்போது திடீரென மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம், “ஒயின்ஷாப் அருகில் வேலை செய்து வந்தேன். எதற்காக என்னை இங்கு அழைத்து வேலை செய்யக் கூறுகிறீர்கள்” எனக் கேட்டார். பின்னர், “பஸ்ஸுக்கு போக 200 துட்டு கொடு” என கலெக்டரிடம் சகஜமாய் பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினார். இதையடுத்து பணியில் ஈடுபட்ட மூதாட்டிகளுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் இளநீர் கொடுத்து இளைப்பாற வைத்து வழி அனுப்பிய மாவட்ட ஆட்சியரை துப்புரவு பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.