புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த வந்த நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும், பார் ஊழியர்களுக்கும் வாய்த் தகராறு முற்றி, செந்தில் தான் வைத்திருந்த ஆடு உரிக்கும் கத்தியால் பார் ஊழியர் சுதாகர்(எ)கணேசனை தொடையில் குத்தி கிழிக்க சக பார் ஊழியர்கள் செந்திலை கல் மற்றும் கட்டையால் தாக்கியதில் செந்தில் மண்டை உடைந்து சாய்ந்தார்.
அங்கு நின்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்ல ஒரு கி.மீ தூரத்தில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிற்கும் ஆம்புலன்சை அனுப்பாமல் 20 கி.மீ தூரத்தில் உள்ள மறமடக்கி கிராமத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்து செந்திலை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றது. இதனால் ஒருமணி நேரத்தில் அதிகமான ரத்தம் வெளியேறியது. தொடையில் காயமடைந்த கணேசனை அங்கிருந்த இளைஞர்கள் பைக்கில் கீரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கீரமங்கலம் ஆம்புலன்ஸ் ஏன் வரவில்லை என்று கேட்டபோது, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்களுக்கு 8 மணி நேரம் பணி கொடுங்கள் அல்லது 24 மணி நேர பணி கொடுங்கள். முழு ஒரு நாள் பணி பார்த்துவிட்டு ஒரு முழு ஒரு நாள் (24 மணி நேரம்) ஓய்வு எடுத்துக் கொள்கிறோம் என்று அந்தந்த மாவட்ட 108 நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்ட 108 நிர்வாகம் பணி நேரம் 12 மணி நேரம் தான். 12 மணி நேரம் பணி முடிந்ததும் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு செல்லுங்கள். இரவில் ஓட்ட வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டதால் கீரமங்கலம் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 12 மணி நேர பணிக்காலம் முடிந்து இறங்கிச் சென்றுவிட்டதால் பணியாளர் இல்லாமல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் கீரமங்கலம் ஆம்புலன்ஸ் வரவில்லை என்கின்றனர்.
இதே போல ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் பல ஆம்புலன்ஸ்கள் இரவில் நிறுத்தப்படுவதால் அவசரகால சேவை பாதிக்கப்படுகிறது என்கின்றனர். அவசரம், ஆபத்தான நேரங்களில் உயிர் காக்க தான் 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் மாவட்ட 108 நிர்வாகம் பணியாளர்களை வஞ்சிக்கும் நோக்கத்தில் இரவில் ஆம்புலன்ஸ் சேவையை நிறுத்தி பொதுமக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள். பல இடங்களில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணியும் அமைத்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.