தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியாகி மருத்துவமனையில் பாதுகாக்கப்படும் 6 பேரின் உடல்களை ஜிப்மர் மருத்துவரை கொண்ட குழு மூலம் விரைவில் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியாகி பாதுகாக்கபடும் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் மருத்துவரை சேர்க்கக்கோரி வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன், நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட ஆறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்நிலையில் மில்ட்டன் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் நேற்று ஆஜராகி 7 பேரின் மறு உடற்கூறு ஆய்வின்போது, சென்னை உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி டெல்லி எய்ம்ஸ் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவரை ஆலோசிக்காமல் ஜிப்மர் மருத்துவரை மட்டுமே தேர்வு செய்ததால், மீதமுள்ள 6 உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதில் தங்கள் மருத்துவரையும், வழக்கறிஞரையும், உறவினரையும் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ப்பி.ட்டி.ஆஷா ஆகியோர் விசாரித்தபோது, வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, 6 பேரின் உடலை பிரதே பரிசோதனையின் போது திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவில் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு உத்தரவிட்டதன், அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவமனை மருந்தவரை தேர்ந்து எடுத்தாகவும் தெரிவித்தார்.
அப்போது, விடுமுறை கால அமர்வு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய மறுத்த நீதிபதிகள், மீதமுள்ள 6 பேரின் உடல்களை எவ்வளவு விரைவாக உடற்கூறு ஆய்வு செய்ய முடியுமோ விரைவில் முடித்து, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
அப்போது, தன்னுடைய உறவினர் மரணம் அடைந்தபோது பிணவறையிலிருந்து அந்த உடலை வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி, அதன் அடிப்படையில் தான் இந்த ஆறு பேரின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் என்பது துரதிஷ்டவசமானது தான் என்றும், இரு தரப்பு கருத்தையும் கேட்கும் வகையில் சுதந்திரமான விசாரணை என்பது தேவை என்பது மறுக்க முடியாது என்றும், ஆனால் தற்போது உடற்கூறு ஆய்வு தான் பிரதானமான ஒன்று என தெரிவித்தார்.
மேலும் பிரேத பரிசோதனை கோரி உறவினர்கள் அரசு நிர்வாகத்தை அணுகி கடிதம் கொடுத்தவுடன் பிரேத பரிசோதனை செய்து கொடுக்க வேண்டும் , கடிதம் கொடுக்கபடாத உடல்களுக்கு ஏற்கனவே வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் பிரேதப்பரிசோதனை செய்யலாம் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு, வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.