காவல்துறை பணிக்கான உடல்தகுதித் தேர்வில் நான்கு திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை டிசம்பர் 5- ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளுக்கும் தடை விதிக்க நேரிடும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை பணிகளுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தீபிகா, ஆராதனா, தேன்மொழி, சாரதா ஆகிய திருநங்கைகள், தங்களை உடல் தகுதி தேர்வுக்கு அழைக்காததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் நான்கு பேரையும் உடல்தகுதித் தேர்வுக்கு அனுமதிக்க சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தங்களை உடல்தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 திருநங்கைகளும் மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வந்தபோது, திருநங்கைகளின் நலனுக்காக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்த பிறகுதான் மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தார்.
இதேவாதத்தைக் கேட்ட பிறகுதான், பாகுபாடுகளைக் களைய திருநங்கைகளை உடல்தகுதித் தேர்வில் கலந்து கொள்ள அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறிய நீதிபதி, நான்கு திருநங்கைகளையும் உடற்தகுதி தேர்வில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை, டிசம்பர் 5- ஆம் தேதிக்குள் அமல்படுத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு நடைமுறை முழுவதையுமே தடை விதிக்க நேரிடும் என்றும் தேர்வு வாரியத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.