நாங்களும் களத்தில் தான் இருக்கின்றோம் என்பதனை அறிவிக்கும் விதமாக, 17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவினை வாங்கி குவித்துள்ளது நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம். இதில் கமலஹாசன் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும், கமீலா நாசர் மத்திய சென்னையிலும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில், "ஏற்கனவே இங்கு தான் போட்டியிடுவார் என்பதால் தான் முன்கூட்டியே தொகுதியின் முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை கையிலெடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடி நீர் விநியோகம் செய்து வருகின்றோம்." என்கின்றனர் அவரது கட்சியினர்.
பிறந்தது ராமநாதபுரம் என்றாலும், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், " நான் பரமக்குடிக்காரன்." எனக் கூறி பெருமைக் கொள்வார் மக்கள் நீதி மய்யத்தின் கமலஹாசன். ஒரு வருடத்திற்கு முன்பு கட்சியை அறிவிக்கும் நாளன்று பயணத்தை துவக்கியது தொகுதியிலுள்ள ராமேஸ்வரத்தில் தான். அந்தளவிற்கு தொகுதியின் மீதான பற்றுதல் அதிகம் அவருக்கு. இந்நிலையில், 17வது மக்களவைத் தேர்தலில் கட்சிப் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டதால், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் கமலஹாசன் போட்டியிடவேண்டுமென இரட்டை இலக்கத்தில் விருப்பமனுக் கட்டியுள்ளனர் தொகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகள்.
இத்தொகுதியில் கமலஹாசன் வேட்பாளராக களமிறங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அவர்கள். அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவதோ., " பொதுவாக தண்ணியில்லாக் காடு என்றாலே ராமநாதபுரம் மாவட்டம் தான். இப்பொழுதும் அதே நிலை தான். மாவட்டம் முழுக்க தண்ணீர் தான் பிரச்சனை. கட்சி ஆரம்பிக்கும் போதே உங்கள் ஊரிலுள்ள பிரச்சனைகளைப் பட்டியலிடுங்கள். அதை சரி செய்ய முயலுங்கள் என்றார். அதனை சரி செய்து கொண்டு வருகின்றோம். அதாவது பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடி நீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம். ஏறக்குறைய 6 மாதங்களாக நடந்து வரும் இப்பணி மாவட்டம் முழுமைக்கும் விரிவடைந்துள்ளது. இது வாக்குகளாக மாறும். ஆதலால் கமலஹாசன் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்குத் தெரியப்படுத்தி உள்ளோம்." என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள்.
இலவச குடிநீர் வாக்குகளை வாங்கித் தருமா.? என்பதனை காலம் பதில் கூறும்..!