கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கள்ளச்சாராய ஊறல் ஆகியவை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். மிக அண்மையில் கல்வராயன் மலையில் சுமார் 1000 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, குன்னத்தூர் பகுதியில் வீட்டுக்குள்ளேயே ஒரு நபர் கள்ளச்சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜி என்பவர் வீட்டில் கள்ளச்சாராய ஊறல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்டவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது கூரை வீட்டில் பெரிய ட்ரம்மில் 150 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டறிந்த போலீசார் கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜியிடம் மேற்கொண்ட விசாரணையில், கள்ளச்சாராயம் ஊறல் வாசம் வெளியே வராமல் இருப்பதற்காக ட்ரிக்காக தினமும் சாம்பிராணி புகைபோட்டு அந்த பகுதியைப் பராமரித்து வந்தது தெரிய வந்துள்ளது.