கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஊழியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் போதையில் திரியும் பேருந்து ஊழியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது, பயணிகளைத் தாக்குவது, அடிதடி போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இத்தகைய செயல்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவர்கள் மீது குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அதே காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகள் நேரப் பிரச்சனையால் பேருந்துகளை நேருக்கு நேர் மோதவிட்டனர்.
அதன் பிறகு, சாலையில் இறங்கிய ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியிலும் பயணிகள் மத்தியிலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த தகராறு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் நடுரோட்டிலேயே தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இந்த சம்பவம் குறித்து புகார் அளிப்பதற்காக காந்திபுரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வந்தும் அடங்காத பேருந்து ஊழியர்கள், காவல்நிலைய வளாகத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தினசரி இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.