சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி முதல் பெண் டபேதாராக உள்ளவர் எஸ்.பி.மாதவி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிரியா மேயராக பதவியேற்றதில் இருந்து மாநகராட்சியின் பெண் டபேதாராக எஸ்.பி.மாதவி இருக்கிறார். இந்நிலையில் உரிய நேரத்தில் பணிக்கு வராதது; அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக மணலி மண்டல அலுவலகத்திற்கு அவரை பணியிட மாற்றம் செய்வதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவருக்கு ஏற்கனவே மெமோ அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த மெமோவில் பல்வேறு கேள்விகளுக்கு மாதவி பதிலளித்துள்ளார். அலுவலக நாட்களில் அலுவலகத்திற்கான நேரத்திற்கு வராமல் இருப்பது குறித்து கேள்விக்கு 'நான் மிக தொலைவில் இருந்து அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கிறேன். எனது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது' என பதில் அளித்துள்ளார். உயர் அதிகாரிகளின் ஆணையை உதாசீனப்படுத்துதல் என்ற கேள்விக்கு 'தாங்கள் எனக்கு என்ன ஆணை வழங்கினீர்கள் நான் எந்த ஆணையை உதாசீனப்படுத்தினேன் என்று விவரமாக கூறவும்' என பதிலளித்துள்ளார். அலுவலக நடைமுறைகளை மீறுதல் என்ற கேள்விக்கு ' என்னை உதட்டிற்கு பூசுகின்ற சாயம் போடக்கூடாது என்று கூறினீர்கள். நான் உங்களை மீறி பூசினேன். இது குற்றம் என்றால் எந்த (G. O) அலுவலக ஆணையில் உள்ளது என்று தெரியப்படுத்தவும்' என அவர் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் அலட்சியம் தொடர்பாகவே அவர் பணியிடம் செய்யப்பட்டுள்ளார் உதட்டுச்சாயம் பூசியதற்கும் இந்த பணியிட மாற்றத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.