திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதி அருகில் அரசு புறம்போக்கு இடத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் பக்கத்தில் அதே அரசு புறம்போக்கு இடத்தில் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னகண்ணன் என்பவரின் கடை உள்ளது. அந்தக் கடையை விடுதலைச் சிறுத்தை கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக சின்னகண்ணன் என்பவர் அவர்கள் மீது ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதே போல சின்னகண்ணன் மீது தங்களை தரக்குறைவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர். இரு தரப்பினர்களிடமும் கடந்த 2ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விடுதலைச் சிறுத்தை கட்சி திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் விசாரணையின் போது நகர காவல் நிலைய எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை பார்த்து நீ எஸ்.சி (தாழ்த்தப்பட்டவர்) தானே என்றும் மற்றொரு அதிகாரியான காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் என்பவரை ஒருமையில் மிரட்டல் தொனியில் விசாரணையின் போது பேசும் வீடியோ 5 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் இன்று வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆரணி நகர் முழுவதும் குவிக்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜனவரி 27 ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று விசிக கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி, நகர காவல் நிலையம் வழியாக ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஸ்கரன் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் துணை ஆய்வாளரை கிருஷ்ணமூர்த்தியை அவன், இவன் என்று கூறி தரக்குறைவாகப் பேசியபடி காவல் நிலையம் முன்பு கோஷங்கள் எழுப்பி மிரட்டல் விடுத்தனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த அப்பகுதியிலுள்ள போலீசார் அமைதி காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வாட்ஸாப்பில் நெட்டிசன்கள் பரப்பிய அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆரணி போலீசார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் மற்றும் விசிகவினர் 50 பேர் மீது ஒன்பது பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கர் தலைமறைவாகியுள்ளார். ஆரணி நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக, வி.சி.க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்ற பகலவன் 3 மாத காலத்துக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, இதுபற்றி முழுமையாக விசாரிக்க மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.