Skip to main content

மின்சார சிக்கனம் குறித்து நடந்த பட்டிமன்றம்! 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

Discussion about Electricity

 

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முன்னேறிய காலத்தில் அதற்கு அச்சாணி மின்சாரம். மின்சாரம் இல்லையேல் பருப்பு வேகாது என்பது சொலவடை. கடந்துபோன காலங்களில் மின்சாரத் தேவையையும் தாண்டி மின் உற்பத்தியிருந்தது. ஆனால், தற்போது உலகம் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கிறது. பட்டாம்பூச்சி வெளிச்சம் போய் பகட்டான லைட்கள் இரவைப் பகலாய் வெளிச்சம் போடுகின்றன என்றால் வியாபார நோக்கில் செயல்படுகிற பெரிய பெரிய நிறுவனங்களில் மின்விளக்குகள் அட்டகாசப்படுத்துகின்றன. 

 

இதற்கேற்ப மின் தேவையும் அதிகரித்திருக்கிறது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். எவ்வளவுதான் மின் தயாரிப்பில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்றாலும், தனியார் மற்றும் மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் பெற வேண்டிய நிலைமை. காரணம், நாளுக்கு நாள் மின் தேவையின் அதிகரிப்பே. இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு மின் வாரியத்தின் நெல்லை மாவட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மக்களிடம் மின் சிக்கனம் பற்றி விழிப்புணர்வ ஏற்படுத்தும் வகையில் சங்கரன்கோவில் நகரில் மின் சிக்கன வாரவிழா மற்றும் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

Discussion about Electricity

 

செயற்பொறியாளர் நடராஜன் தலைமையில், உதவி செயற்பொறியாளர்கள் தங்கையா தங்கராஜ், முஜிப் ரகுமான் ஆகியோர் உரையாற்றிய நிகழ்ச்சியில், பொதுமக்களும் பல தரப்பு மின்நுகர்வோர்களும் கலந்துகொண்டனர். எந்தெந்த வழிகளில் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தலாம் என்று மின்பொறியாளர்கள் வகைப்படுத்தினார்கள்.

 

சுவர்களுக்கு இளநீல வண்ணங்கள் பூசுவதால் ஒளி பிரதிபலிக்கப்பட்டு அறை வெளிச்சமாகும். குண்டு பல்புகளுக்குப் பதிலாக CFL அல்லது LED விளக்கு பயன்படுத்துதல், முழு ஒளியையும் அதிக அளவில் பெற மின் விளக்குகளை தூசிபடியாமல் துடைத்தல், பகலில் இயற்கை காற்றையும் சூரிய ஒளியையும் அதிக அளவில் பயன்படுத்துதல் மூலம் மின்சக்தியை சேமிக்கலாம். அதிக நட்சத்திரக் குறியீடு, அதிக மின் சேமிப்பின் அடையாளம். குளிர்பதனப் பெட்டியை சுவற்றிலிருந்து ஒரு அடி தள்ளியும் வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகில் அல்லாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் உள்ளே படியும் உறைபனியை அவ்வப்போது நீக்கிவிடுங்கள். குளிரூட்டி இயங்கும்போது மின்விசிறியைப் பயன்படுத்தினால் அறைமுழுவதும் குளிர் சீராகப் பரவும். வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை மிதமாக சூடேற்றி குளிக்கப் பயன்படுத்த வேண்டும். எர்த் லீக்கேஜ் பிரேக்கரை வீடுகளில் மெயின் ஸ்விட்ச் போர்டில் பயன்படுத்தினால் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம். CRT மானிட்டருக்குப் பதில் LED அல்லது LCD மானிட்டரை உபயோகப்படுத்தினால் மின் செலவு குறையும் என்று மின்சிக்கனம், மின் சேமிப்பு, பாதுகாப்பு பற்றி மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர். 

 

Discussion about Electricity

 

மின் சிக்கனம் பற்றி பள்ளி மாணவிகள் தாங்கள் வரைந்த ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தியதில் பரிசுபெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக மின்சிக்கனம் பற்றிய சிந்தனைப் பட்டிமன்றம் முனைவர் வேலன் சங்கர் ராம் தலைமையில் நடந்தது.

 

இதில் பேசிய வேலன் சங்கர் ராம், “தொலைக்காட்சி பெட்டிக்கு நேரம், காலம் தேவை. வளர்ந்துவரும் நாடுகள்ல தொலைக்காட்சி ஒளிபரப்புக்குக் கால அவகாசம் வைச்சிருக்காங்க. அதனால அங்கு மின் சிக்கனம் உள்ளது. அதுமாதிரி இங்க இருக்கா, இல்ல. 24 மணி நேரமும் அலறுது. விடிய விடிய தொடர்ந்து ஓடுது. அதனாலதான், இங்க கூட தொலைக்காட்சிப் பெட்டிக்கு நேரக் கட்டுப்பாடு வையுங்கன்றாங்க. அரசாங்கத்துக்கு டி.வி. நேரக் கட்டுப்பாடு வேணும்னு கோரிக்கை வைக்கறாங்க. சாப்பாட மறந்து, வீட்டுக்கு யார் வாராங்கன்னு தெரியாம தொடர் பாத்திட்டிருக்காங்க. பின்ன எப்புடி மின்சிக்கனம் வரும். திடீர்னு மின்வெட்டு, இடியில் டி.வி. போர்டு போயி ரிப்பேராயிறுச்சி. வீட்டுக்காரர், டி.வி.ய ரிப்பேர்க்குப் போட்டிருக்கேன். ரெண்டு நாளு ஆவும். பக்கத்து வீட்ல போயி டி.வி. பார்த்து எம்மானத்த வாங்கிறாதீங்கன்றார். ஆனா இவுக விடாம பக்கத்து வீட்ல போயி தொடரப் பாக்காக. நெலம அப்புடிதான இருக்கு. நாம பழைய வாழ்க்கையை நூறு சதம் மறந்துபோனோம். கடைசில என்னாவும், சம்சாரமும் போச்சு மின்சாரமும் போச்சு கதையாயிறும். டி.வி.க்கும் செல்ஃபோனுக்கும் அடிமையாயிட்டோம். நாம இயல்பான பொருளாதர வாழ்க்கையைப் பத்தி சிந்திக்கல” என மின்சிக்கனம் பற்றிய கலகல பட்டிமன்றம் சிந்தனையையும் மின்சிக்கனத்தையும் பற்றிக் கண்முன்னே கொண்டு வந்தது.

 

 

சார்ந்த செய்திகள்